முஸ்லீம் திருமணங்களுக்கான அரசு திருமணச் சான்றிதழ்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முஸ்லீம் திருமணங்களை சிறப்புத் திருமணச் சட்டத்தின் அடிப்படையிலேயே பதிவு செய்து சான்றிதழ் பெற முடியும் என்ற நிலை இருந்தது. சிறப்புத் திருமணச் சட்டத்தின் அடிப்படையில் சான்றிதழ் பெறுவதற்கு முப்பது வேலை நாட்கள் காத்திருக்க வேண்டும். இது ஒரு கடினமான நடைமுறையாகும். ஆனால் தற்போது இந்த சிக்கல் தீர்க்கப்பட்டு, முஸ்லீம்களும் தங்கள் திருமணங்களை தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், 2009 ஆம் ஆண்டுக்கு முன்பான முஸ்லீம் திருமணங்களை தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்ய முடியாது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்பான முஸ்லீம் திருமணங்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் அடிப்படையில்தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலை நீடிக்கிறது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்பான இந்து மற்றும் கிறித்துவர் திருமணங்களை இந்து திருமணச் சட்டம் - 1954 , இந்திய கிறித்துவத் திருமணச் சட்டம் - 1872 ஆகிய சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்து ஒரே நாளில் அரசு திருமணச் சான்றிதழை பெற முடியும். முஸ்லீம் திருமணங்களுக்கு அத்தகைய வாய்ப்பு எதுவும் இல்லை. இச்சிக்கலைத் தீர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்கு முன்பான அனைத்து மதத் திருமணங்களையும் அபராதத் தொகை நிர்ணயத்துடன் தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின் வழியாகவே பதிவு செய்ய இயலும் என்கிற நிலையை ஏற்படுத்துவதற்கு தமிழ்நாடு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இதற்கான தனியான சட்டம் இயற்ற வேண்டிய அவசியமில்லை. அரசாணை வெளியிட்டாலே போதுமானது.
www.registermarriages.in
Comments
Post a Comment